ஈரோடு மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறன் கொண்ட 5435 பேர் நாளை தபால் வாக்களிக்கவுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 80 வயதுக்கு மேற்பட்ட 50 ஆயிரத்து 62 வாக்காளர்களும், 14 ஆயிரத்து 597 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். இவர்களில், தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்த, 80 வயதுக்கு மேற்பட்ட 4,413 வாக்காளர்களிடமிருந்தும், 1022 மாற்றுத்திறனாளி வாக்காளர் களிடமிருந்தும் படிவங்கள் பெறப்பட்டுள்ளன.
இதன்படி, 80 வயதுக்கு மேற்பட்டோர் ஈரோடு கிழக்குத் தொகுதியில் 307, ஈரோடு மேற்கு தொகுதியில் 677, மொடக்குறிச்சி 882, பெருந்துறை 799, பவானி 449, அந்தியூர் 266, கோபி 822, பவானி 211 பேர் என 4413 பேரும், மாற்றுத்திறனாளிகள் 1022 பேர் என 5435 வாக்காளர்கள் தபால் வாக்களிக்கவுள்ளனர்.
இவர்கள் வாக்களிக்க ஏதுவாக, சம்பந்தப்பட்ட சட்டப் பேரவைத் தொகுதியின் சார்பில் வாக்கு சேகரிக்கும் குழு அவர்களது முகவரிக்கு நாளை (28-ம் தேதி) நேரடியாகச் சென்று தபால் வாக்குகளை வழங்கி வாக்களித்த பின்னர் திரும்ப சேகரித்து எடுத்து செல்வார்கள்.
இதனை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்களும் உடனிருந்து கண்காணிக்கலாம். நாளை தபால் வாக்களிக்க முடியாதவர்களுக்கு 31-ம் தேதி வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago