ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவல் துறையினர் பாதுகாப்புடன் 697 நபர்களின் வீடுகளுக்கு இன்று நேரில் சென்று தபால் வாக்குகள் சேகரிக்க உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பியவர்கள் தபால் வாக்குகள் அளிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, தேர்தல் ஆணையம் தகுதியுள்ள நபர்களின் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்குகள் அளிப்பதற்கான விருப்ப மனு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெறப்பட்டது. அதில், 697 பேர் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையில், தபால் வாக்குகளை வீடு, வீடாகச் சென்று சேகரிக்க வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி உதவி அலுவலர், நுண்பார்வையாளர், வீடியோகிராபர், துப்பாக்கி ஏந்திய காவலர் என ஒரு குழு வாக்குச்சாவடி வாரியாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் அவர்களுக்கு உரிய பகுதிகளில் விருப்ப மனு அளித்தவர்களிடம் தபால் வாக்குகளை சேகரிக்க உள்ளனர்.
இந்த குழுவினர் இன்று (27-ம் தேதி) காலை 8 மணி முதல் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். பின்னர், தேர்தல் அலுவலர் வசம் ஒப்படைக்கப்படும் தபால் வாக்குகள் பாதுகாப்பு அறையில் வைத்து சீலிட உள்ளனர். எனவே, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், கரோனாவால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பியவர்கள் தங்களது வீட்டில் இருந்து தபால் வாக்குகள் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago