சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு - நெல்லையில் சமூகவலைதள கட்டுப்பாட்டு அறை :

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சிறப்பு சமூகவலைதள கட்டுப்பாட்டு அறை திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள விதிகளின்படி அரசியல் கட்சியினர் சமூக வலைதளங்களில் மேற்கொள்ளும் தேர்தல் தொடர்பான பிரச்சாரங்களை கண்காணிக்கும் பொருட்டு இந்த கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் திறந்து வைத்து, தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான வே.விஷ்ணு கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பேஸ்புக், யூ-டியூப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சியினர் சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது வேட்பாளர்களுக்கு சமூகவலைதளங்கள் மூலமாக ஆதரவு திரட்டுகின்றனர். இதனை கண்காணித்து சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்ப்பதற்காக சமூக வலைதளங்களில் வெளியிடும் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் கணக்கிடப்பட்டு வருகின்றன.

தேர்தல் விதிமீறல்கள், போலியான செய்திகள் வெளியிடுவதையும் தீவிரமாக கண்காணிக்கிறோம். தேர்தல் ஆணையம் விதித்துள்ள விதிமுறைகளின்படி முறையான தேர்தல் நடத்துவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்று தெரிவித்தார்.

இதை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 316 பதற்றமான வாக்குச்சாவடிகளுடன், கூடுதலாக 647 வாக்குச்சாவடிகளைச் சேர்த்து 963 (திருநெல்வேலி-204, அம்பா சமுத்திரம்-178, பாளையங்கோட்டை- 195, நாங்குநேரி-198, இராதாபுரம்-188,) வாக்குச்சவாடி மையங்களில் இணையவழி கேமராக்கள் பொருத்தப் பட்டது. அவற்றின் செயல்பாடுகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், தேசிய தகவல் மைய மேலாளர்கள் தேவராஜன், ஆறுமுக நயினார், தேர்தல் வட்டாட்சியர் ஆர்.கந்தப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சமூக வலைதளங்களில் வெளியிடும் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் கணக்கிடப்பட்டு வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்