விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. தேர் நிலையில் இருந்து இறங்கிய போது அதன் அருகே உள்ள உயர் கோபுர மின் விளக்கு மீது தேர் உரசுவது போல வந்தது.
இதனால், தேரை நிறுத்திய பக்தர்கள் தேரை மறுபடியும் பின்னால் நகர்த்திய பிறகு மீண்டும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
ஆனால், தேர் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. சுமார் 30 நிமிடத்துக்கு மேலாக பக்தர்கள் போராடியும் தேரை நகர்த்த முடியவில்லை. பின்னர், ‘பொக் லைன்’ இயந்திரத்தை வரவழைத்து தேரை பின்னால் இருந்து நகர்த்தினர். அப்போதும் தேர் அந்த இடத்தைவிட்டு நகரவில்லை. பல கட்ட முயற்சிக்குப் பிறகு தேர் நிலையில் இருந்து நகரத் தொடங்கியதும் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அப்போது, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் மாட வீதிகளில் தேர் வலம் வந்தது. தேரோட்டத்தில் விரிஞ்சிபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago