தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் சுறுசுறுப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் இன்னும் வரவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆலங்குளம் தொகுதி திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
அவர் பேசும்போது, “திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும்.
சங்கரன்கோவில் பகுதியில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். செண்பகவல்லி அணை திட்டம் முறைப்படுத்தப்படும். கருப்பா நதியை தூர்வாரி சங்கரன்கோவில் தெற்கு பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு வரப்படும்” என்றார்.
ஆலங்குளம் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து ராதிகா சரத்குமார் பிரச்சாரம் செய்தார். அவர் பேசும்போது, “மாற்றம் ஒன்றுதான் உறுதியானது, நிலையானது. அந்த மாற்றத்துக்காக எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். ஓட்டுக்கு காசு வாங்கினால் ஒரு நாளில் காலியாகிவிடும். எங்க ளுக்கு வாய்ப்பளித்து மாற்றத்தை உருவாக்குங்கள்” என்றார்.
தென்காசி மாவட்டத்தில் பிரபலங்கள் வருகையால் தேர்தல் பிரச்சாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது. அடுத்த சில நாட்களில் முக்கிய தலைவர்கள் வர உள்ளதால் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago