தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் சுயேச்சைகள் ஆதிக்கம் அதிகம் இருக்கும் நிலையில், பவானிசாகர் தொகுதியில் சுயேச்சைகள் யாரும் களம் இறங்காமல், பிரதான கட்சி வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தின் பாசன ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, பண்ணாரி மாரியம்மன் கோயில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் போன்றவை பவானிசாகர் தொகுதியில் அமைந்துள்ளன. திருப்பூர், கோவை, கர்நாடக மாநில எல்லைப்பகுதி என பவானிசாகர் தொகுதி விரிந்துள்ளது. வேட்டுவக்கவுண்டர், நாடார், கொங்கு வேளாள கவுண்டர், பட்டியல் இனத்தவர், மலைவாழ் மக்கள் நிறைந்த தொகுதி. புன்செய்புளியம்பட்டி, சத்தியமங்கலம் என இரு நகராட்சி கள் தொகுதியில் உள்ளன.
சத்தியமங்கலம், பவானிசாகர் என இரு தொகுதிகளாக இருந்த நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பின் மூலம், பவானிசாகர் தனித்தொகுதி உருவானது.
அந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பிரதான கட்சி வேட்பாளர்களுடன் 6 சுயேச்சை வேட்பாளர்களும் களமிறங்கியதால், மொத்தம் 11 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 3 சுயேச்சைகள் உட்பட 13 பேர் பவானிசாகர் தொகுதியில் போட்டியிட்டனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு, பவானிசாகர் தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர்கள் மற்றும் அவர்களது மாற்று வேட்பாளர்கள் என மொத்தம் 8 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இவற்றில் இரு மாற்று வேட்பாளர்கள் திரும்பப்பெற்ற நிலையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக, தேமுதிக, பகுஜன் சமாஜ் மற்றும் நாம் தமிழர், மக்கள் நீதிமய்யம் ஆகிய பிரதான கட்சிகளைச் சேர்ந்த 6 வேட்பாளர்கள் மட்டும் பவானிசாகர் தொகுதியில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத தொகுதியாக பவானிசாகர் தொகுதி மாறியுள்ளது. கடந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் பலர் போட்டியிட்டபோதும், அவர்கள் நோட்டாவிற்கு கீழே வாக்குகள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago