நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய இரு தொகுதிகள் நீங்கலாக மற்ற 4 தொகுதியில் 16-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் இரு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 6 தொகுதியிலும் மொத்தம் 140 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில், ஒவ்வொரு தொகுதியிலும் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என பலர் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளர் மற்றும் 1 நோட்டா என மொத்தம் 16 சின்னங்கள் மட்டுமே இருக்கும். இதற்கு அதிகமான வேட்பாளர்கள் இருந்தால் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்த வேண்டும்.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கமலம் தொகுதிகளில் தலா 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நாமக்கல் தொகுதியில் 26, திருச்செங்கோடு தொகுதியில் 28, பரமத்தி வேலூர் தொகுதியில் 27, குமாரபாளையம் தொகுதியில் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனவே ராசிபுரம், சேந்தமங்கலம் நீங்கலாக மற்ற 4 தொகுதியிலும் 16-க்கும் அதிகமான வேட்பாளர்கள் இருப்பதால் இரு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.
இதற்கு சுயேச்சை வேட்பாளர்கள் அதிகளவில் தேர்தல் களத்தில் இருப்பது முக்கிய காரணமாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குமாரபாளையம் தொகுதியில் அதிகபட்சமாக 21 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago