மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி, விழிப்புணர்வு வாகன பேரணி பாளையங்கோட்டையில் நடைபெற்றது. காதுகேளாதோர் பள்ளியிலிருந்து பேரணியை பயிற்சி ஆட்சியர் பி.அலர்மேல் மங்கை தொடங்கி வைத்தார். பேரணியில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர்.
பயிற்சி ஆட்சியர் கூறும்போது, “ தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் வரிசையில் நிற்காமல் முதலில் வாக்களிக்க முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வாக்குச்சாவடியில் சாய்வுதள வசதி மற்றும் சக்கர நாற்காலி வசதி செய்யப்படுகிறது. வாக்களிக்கும் அறையின் வாசல் அகலமாகவும், வாக்களிக்கும் இடம் வரை சக்கர நாற்காலியில் சென்று திரும்பும் படி இடவசதியும் செய்யப்பட்டுள்ளது. பார்வை குறைபாடுகள் உள்ளவர்களுக்கு மின்னணு வாக்களிப்பு இயந்திரத்தில் பிரெய்லி வசதி செய்யப்பட்டுள்ளது. பார்வையற்றவர்களுக்கு உதவி தேவைப்படின் ஒரு நபரை உடன் அழைத்து வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைக்கு வருபவருக்கு வலது கை ஆள் காட்டி விரலில் மையிடப்படும்.
வாக்கு இயந்திரம் வைத்திருக்கும் மேஜை மாற்றுத் திறனாளிகள் அணுகக்கூடிய உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பார்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
வாக்களிக்க வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதற்கு ஏதுவாக ஒரு வாக்குச்சாவடி அலுவலரும், இரண்டு தன்னார்வ தொண்டர்களும் இருப்பார்கள். மாற்றுத்திறனாளிகள் உதவிக்கு 7598000251 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம்” என்றார்.
பாளையங்கோட்டை பேருந்து நிலையம் , மகாராஜ நகர் ரவுண்டானா வழியாக மீண்டும் காது கேளாதோர் பள்ளியில் பேரணி நிறைவுபெற்றது. காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
துணை ஆட்சியர் (பயிற்சி) மகா லெட்சுமி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சாந்தி குளோரி எமரால்டு , பாளையங்கோட்டை வட்டாட்சியர் செல்வன், முடநீக்கி யல் வல்லுநர் பிரபாகரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago