சீரான குடிநீர் விநியோகம் கோரி - ஈரோட்டில் மாநகராட்சி வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் :

By செய்திப்பிரிவு

ஈரோட்டில் சீராக குடிநீர் வழங்கக் கோரி மாநகராட்சி குடிநீர் வாகனத்தை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

ஈரோடு மாநகராட்சி 54-வது வார்டுக்கு உட்பட்ட குந்தவை வீதி, சீதகாதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் மூலம், ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3 மாதமாக தண்ணீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் முறையிட்டனர். மாநகராட்சி சார்பில் இந்த பகுதி மக்களுக்கு தினமும் டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக இந்த தண்ணீரும் சரியாக விநியோகிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், நேற்று மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்ய வந்த டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

குழாய் மூலம் மீண்டும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். குடிநீர் விநியோகத்தை விரைந்து சீர் படுத்துவதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து வாகனத்தை விடுவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்