ஈரோட்டில் கடந்த இரு நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் கொளுத்துவதால், பகல் நேரங்களில் தேர்தல் பிரச்சாரம் முடங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இன்னும் பிரச்சாரம் மேற்கொள்ளாத நிலையில், கமல்ஹாசன், கனிமொழி, ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில் வேட்பாளர்கள் தங்களது கூட்டணிக் கட்சியினரோடு காலை நேரங்களில் வீடு, வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். முதல் நாளிலேயே எந்தெந்த பகுதிகளுக்கு வேட்பாளர் வருகிறார் என்று அறிவிக்கப்பட்டு விடுவதால், வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுக்கவும், வரவேற்பு அளிக்கவும் அந்த பகுதி வாக்காளர்களை கட்சி நிர்வாகிகள் தயார்படுத்தி விடுகின்றனர். இதேபோல் மாலை நேரத்திலும் பிரச்சாரம் தொடர்கிறது.
இந்நிலையில், கடந்த இரு நாட்களாக ஈரோட்டில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது. இதனால், காலை 11 மணிக்கு மேல், மாலை 4 மணி வரை வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு செல்ல முடியாமல் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெயில் நேரத்தில் அரங்க கூட்டங்களில் நிர்வாகிகளுடன் ஆலோசனை, தனிப்பட்ட முறையில் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுவது, வாக்காளர் பட்டியல் படி ஒருங்கிணைப்பாளர்களுக்கு பணிகளை ஒதுக்குவது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
மாலை நேர பிரச்சாரங்கள் பெரும்பாலும், திறந்தவெளி ஜீப்பில் வேட்பாளர்கள் மேற்கொள்கின்றனர். வணிக வளாகங்கள், காய்கறிச்சந்தை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தேர்வு செய்து மாலையில் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால், அதற்கேற்ப தங்கள் பிரச்சார வியூகங்களை கட்சி நிர்வாகிகள் வகுத்து வருகின்றனர்.
சென்னை உள்ளிட்ட சில இடங்களில் வேட்பாளர்களே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும் திரளாக சென்று வாக்குச் சேகரிக்கும் முறைக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago