நூல் ஏற்றுமதியை ஒழுங்குபடுத்தி விலையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

சேலம்: நூல் விலையைக் கட்டுப்படுத்தக் கோரி, தமிழ்நாடு பேப்ரிக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அழகரசன் மற்றும் சேலம் ஜவுளித்துறை பிரதிநிதிகள் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த டிசம்பர் தொடங்கி மார்ச் வரை நூல் விலை 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், ஏற்கெனவே பெறப்பட்ட ஏற்றுமதி ஆர்டர்களுக்கான ஜவுளி உற்பத்தியை முடிக்க முடியாமல் உள்ளோம்.உற்பத்தி செலவு அதிகரிப்பால் சீனா, வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகளுடன் போட்டியிட முடியாமல், புதிய ஆர்டர்களை இழந்து வருகிறோம்.

நூல் ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், உள்நாட்டு சந்தைக்கு தேவையான நூல் கிடைக்காமல் தட்டுப்பாடு, விலையேற்றம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, நூல் ஏற்றுமதியை ஒழுங்குபடுத்தி, உள்நாட்டு சந்தைக்கு தேவையான நூல் கிடைக்கவும், அதன் விலையை கட்டுக்குள் வைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஆட்டையாம்பட்டி சுற்று வட்டார சிறு மற்றும் குறு நவீன விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சக்திவேல், செயலாளர் ராஜவேல் உள்ளிட்டோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

அண்மைக் காலமாக பருத்தி நூல் விலை 40 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நூல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்