வேலூர் மாவட்டத்தில் 8,560 தேர்தல் அலுவலர்களுக்கு - கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் 8,560 பேருக்கு தொகுதி வாரியாக இரண்டாம் கட்ட கணினி குலுக்கல் நேற்று நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 8 ஆயிரத்து 560 பேர் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான முதல் நிலை வாக்குச்சாவடி அலுவலர் உள்ளிட்ட பணிக்கான கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்து, பணி ஆணையும் வழங்கப்பட்டது.

இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நேற்று முன்தினம் 5 மையங்களில் நடைபெற்றன. பயிற்சியில் ஆசிரியர்கள் பங்கேற்க வசதியாக சனிக்கிழமைகளில் மேல்நிலைப் பள்ளி மாண வர்களுக்கு விடுமுறை அறிவிக் கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,783 வாக்குச்சாவடிகளில் காட்பாடி தொகுதியில் 349, வேலூரில் 364, அணைக்கட்டில் 351, கே.வி.குப்பத்தில் 311, குடியாத்தத்தில் 408 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், காட்பாடி தொகுதியில் 1,964 பேர், வேலூரில் 2,029 பேர், அணைக்கட்டில் 1,951 பேர், கே.வி.குப்பத்தில் 1,278 பேர், குடியாத்தத்தில் 1,338 பேர் என மொத்தம் 8,560 பேர் பயிற்சியில் பங்கேற்றனர்.

இந்நிலையில், வாக்குச் சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு தொகுதி வாரியாக பணி ஒதுக்கீடு செய்வதற்கான இரண்டாம் கட்ட கணினி குலுக்கல் நேற்று மாலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்தல் பொது பார்வையாளர்கள் முகம்மது அப்துல் அசீம், சித்தரஞ்சன் குமார், விபுள் உஜ்வால், சித்ரா ஆகியோர் முன்னிலையில் கணினி குலுக்கல் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த் தீபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொகுதி வாரியாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கு அந்தந்த தொகுதியில் நடைபெற உள்ள இரண்டாம் கட்ட பயிற்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்க வேண்டும்.

வேலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு டிகேஎம் கல்லூரி, காட்பாடி தொகுதிக்கு காட்பாடி டான் போஸ்கோ மெட்ரிக் பள்ளி, அணைக்கட்டு தொகுதிக்கு புரம் ஸ்பார்க் மெட்ரிக் பள்ளி, கே.வி.குப்பம் (தனி) தொகுதிக்கு குடியாத்தம் கே.எம்.ஜி கலை கல்லூரி, குடியாத்தம் (தனி) தொகுதிக்கு திருவள்ளுவர் மேல் நிலைப் பள்ளியில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்