வேலூரில் உள்ள தங்கும் விடுதி உரிமை யாளர்கள், பணியாளர்களுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவல் தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. வேலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட் களாக கரோனா பரவல் எண்ணிக்கை 0.5 சதவீதத்தில் இருந்து 1 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்தும் நோக்கில் அபராதத் தொகையை அதிகரித்து மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இரு சக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதத்துடன் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், கரோனா பரவல் அதிகமாக இருக்கும் என கருதப்படும் வேலூர் மார்க்கெட், தனியார் மருத்துவ மனைக்கு எதிரே உள்ள காந்தி ரோடு பகுதியில் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர்களுக்கும் கரோனா தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் நடத்த ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர் நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு, சுண்ணாம்புக்கார தெரு, காந்திரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் வியாபாரிகளுக்காக கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கடந்த வாரம் நடைபெற்றது.
இந்நிலையில், காந்திரோடு பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள், பணி யாளர்களுக்கான சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் அங்குள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நேற்று காலை நடைபெற்றது. முகாமை, மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் சித்ரசேனா தொடங்கி வைத்தார். இதில், சுமார் 500 பேர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
மேலும், வேலூர் மாவட்டத்தில் முதற்கட்ட கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களுக்கான இரண்டாம் தவணை தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து, வேலூர் கிருஷ்ணா நகரில் உள்ள அரசுப் போக்குவரத்து கழக பணிமனையின் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், 300-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago