கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோபி தொகுதியில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் நீரின் மூலம் நேரடியாக 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பாசனமும், கசிவுநீர் மூலம் ஒரு லட்சம் ஏக்கர் நிலமும் பாசனம் பெற்று வருகின்றன. கீழ்பவானி வாய்க்காலில் ரூ.740 கோடி மதிப்பீட்டில், கான்கிரீட் தளம் அமைத்து, புனரமைப்பு செய்ய அரசு அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான ஒப்பந்தப்புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் நிலத்தடி நீர் பாதிக்கும், குடிநீர் பற்றாக்குறை ஏற்படும், கசிவுநீர் மூலம் நீர் நிலைகள் நிரம்புவது தடைபடும், கசிவுநீர் பாசனங்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஈரோடு, கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், நம்பியூரைச் சேர்ந்த இளைஞர் அணித் தலைவர் மூர்த்தி, கோபி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். விவசாயிகளுடன் ஊர்வலமாக வந்த மூர்த்தி, கோபி கோட்டாட்சியர் பழனி தேவியிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதுகுறித்து வேட்பாளர் மூர்த்தி கூறும்போது, கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கள்ளுக்கு தடையை நீக்க வலியுறுத்தியும், தேசிய வங்கிகளில் விவசாயக்கடன் களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுகிறேன். மேலும், 100 நாள் வேலைத்திட்டத்தை விவசாயப் பணிக்கு மாற்றக்கோரியும், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.60, பசும்பால் லிட்டருக்கு ரூ.50 விலை உயர்த்தி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் வலியுறுத்துகிறோம், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago