தேர்தல் பணி ஒதுக்கீடு செய்வதில் குளறுபடி : ஈரோடு அரசு அலுவலர்கள் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணிகளை ஒதுக்கீடு செய்வதில் குளறுபடி நடந்துள்ளதாக, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பணிக்காக13 ஆயிரத்து600 அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன்படி ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வாக்குச்சாவடி அலுவலர், தேர்தல் அலுவலர் மூன்றுபேர் என நான்கு பேர் பணி புரியவுள்ளனர். 750 வாக்குகளுக்குக் குறைவாக உள்ள வாக்குச்சாவடிகளில் 3 பேர் மட்டும் பணியில் இருப்பர். இந்நிலையில், தேர்தல் பணிகளை ஒதுக்கீடு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

வாக்காளர்களின் பெயரை சரிபார்ப்பது, வாக்களிக்க அவர் கொண்டுவரும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபார்த்து பதிவு செய்வது, வாக்காளரிடம் கையெழுத்து பெறுவது போன்றவை வாக்குச்சாவடி அலுவலர் (நிலை 2) பணியாகும். இந்த பணிக்கு, இடைநிலை ஆசிரியர் நிலையிலானவர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். ஆனால், சில வாக்குச்சாவடிகளில் அலுவலக உதவியாளர், இரவு காவலர்களை இந்த பணி மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பவானி அரசுப் பள்ளியில் நடந்த தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாமின்போது, துப்புரவு பெண் தொழிலாளிக்கு வாக்குச்சாவடி அலுவலர் (நிலை 2) பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சரளமாக எழுதப் படிக்கத் தெரியாத ஒருவருக்கு இத்தகைய பணியிடம் வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. இதுபோன்ற குளறுபடிகளைக் களைந்து, சரியான நபர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும். இதன்மூலம் வாக்குப்பதிவு எவ்வித இடையூறும் இல்லாமல் நடக்க வாய்ப்பு ஏற்படும், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்