தேர்தல் நடைமுறைகளால் வியாபாரிகள் வருகை இல்லை - ஈரோடு மாட்டுச் சந்தையில் வர்த்தகம் பாதிப்பு :

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தல் நடைமுறைகளால், ஈரோடு மாட்டுச்சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைந்ததால், வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

ஈரோடு கருங்கல் பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள், இங்கு மாடுகளை வாங்கிச்செல்வது வழக்கம். தமிழகம் மற்றும் கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஈரோடு மாட்டுச்சந்தைக்கு வரும் வியாபாரிகள் நேற்று வரவில்லை.அதேபோல், மகாராஷ்டிரா வில் கரோனா பரவல் காரணமாக, அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் காரணமாக அங்கிருந்தும் வியாபாரிகள் வரவில்லை. இதனால், நேற்றைய மாட்டுச்சந்தையில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

மாடுகளை விற்று பணம் எடுத்துச் செல்லும் போது, தேர்தல் அதிகாரிகளிடம் காட்டும் வகையில், ரசீது வழங்கப்படுவதால், மாட்டினை விற்பனை செய்ய விவசாயிகள் வழக்கம்போல் சந்தைக்கு வந்தனர். ஆனால், எதிர்பார்த்த விற்பனை நடக்காததால், மாடுகளை மீண்டும் திரும்ப கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.

ஈரோடு மாட்டுச்சந்தையில் நேற்று 100 வளர்ப்புக் கன்று, 450 பசுமாடுகள், 200 எருமை மாடு என 750 மாடுகள் விற்பனைக்கு வந்தன.

வளர்ப்புக் கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும், பசுமாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையும், எருமை மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரையும் விற்பனையானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்