தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் (தனி) தொகுதியில், சங்கரன்கோவில் நகராட்சி, சங்கரன்கோவில் தாலுகாவில் ஒரு பகுதி மற்றும் 73 ஊராட்சிகள், திருவேங்கடம் பேரூராட்சி ஆகியவை அடங்கியுள்ளன. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் கள் அதிகமாக உள்ளனர். தேவர், யாதவர் சமுதாய த்தினரும் கணிசமாக உள்ளனர்.
விவசாயம், விசைத்தறி ஆகியவை இந்த தொகுதி மக்களின் முக்கிய தொழில் கள். கிணற்றுப் பாசனம், மானாவாரி பாசனத்தை நம்பியே விவசாயிகள் உள்ளனர். பெரும்பாலான விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளன. மாவட்டம் முழுவதும் மழை பெய்து குளங்கள் நிரம்பினாலும், சங்கரன்கோவில் சுற்றுவட்டார குளங்கள் பெரும்பாலும் வறண்டு கிடப்பதே வாடிக்கை. பூக்கள், எலுமிச்சை மற்றும் மானாவாரி பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
குளங்கள் நீர் வரத்து பெற கால்வாய்களை தூர்வார வேண்டும். ஆற்றுப்பாசனம் இல்லாத இப்பகுதிக்கு, தாமிரபரணி ஆற்றில் இருந்து அல்லது மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர் வளம் உள்ள பகுதிகளை ஆராய்ந்து அங்கிருந்து கால்வாய் அமைத்து, பாசன வசதியை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதுபோல், நூல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி விசைத்தறி தொழில் படிப்படியாக முடங்கி வருகிறது. விசைத்தறி தொழிலை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயம் ஏமாற்றம், விசைத்தறி தொழில் பாதிப்பு, பிற தொழிற்சாலை வசதிகள் இல்லாதது போன்ற காரணங் களால் வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் தொழிலாளர் கள் கூலி வேலைக்குச் செல்லும் நிலை உள்ளது. எனவே, புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் 1,22,739 ஆண் வாக்காளர்கள், 1,30,195 பெண் வாக்காளர்கள், 5 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,52,939 வாக்காளர்கள் உள்ளனர். அதிமுகவின் கோட்டையாக சங்கரன்கோவில் தொகுதி கருதப்படுகிறது. இதுவரை, நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்கள் 9 முறை வெற்றி பெற்றுள்ளனர். திமுக 4 முறை, காங்கிரஸ் 2 முறை, சுயேச்சை வேட்பாளர் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.எம்.ராஜலெட்சுமி தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றார். அவர் மீண்டும் இத்தொகுதியில் போட்டி யிடுகிறார். தொகுதியில் நிறைவேற்றியுள்ள திட்டப் பணிகள், பாஜக கூட்டணி ஆகியவை தனக்கு பலம் சேர்க்கும் என்று கருதுகிறார். மற்றொரு கூட்டணியான பாமகவுக்கு இங்கு வாக்கு வங்கி அதிகமாக இல்லை. அமமுக தனி அணியாக போட்டியிடுவது போன்றவை பலவீனமாக கருதப்படுகிறது.
சங்கரன்கோவில் தொகுதி அதிமுகவின் கோட்டை என்ற பெயரை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் திமுகவினர் பணியாற்றி வருகின்றனர். மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி பலம், சிறுபான்மையினர் வாக்குகள் ஆகியவை திமுகவுக்கு வலு சேர்க்கின்றன. திமுக வேட்பாளர் ராஜா தொகுதிக்கு தொடர்பில்லாதவர் என்பது பலவீனமாக உள்ளது. அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கூட்டணி ஆகியவையும் போட்டியிட்டாலும் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. வேட்பாளர்களின் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சங்கரன்கோவில் அதிமுக கோட்டை என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்படுமா? அல்லது திமுக வெற்றி வாகை சூடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago