ஈரோட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ 2 கோடியே ஐந்து லட்சத்தை கண்காணிப்புக்குழுவினர் பறிமுதல் செய்த நிலையில், உரிய ஆவணங்களைக் காட்டி பொதுத்துறை வங்கி நிர்வாகம் மீட்டுச் சென்றது.
ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நேற்று வாகனத்தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது ஈரோடு - சத்தியமங்கலம் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து, வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம்.,களுக்கு பணம் நிரப்ப தனியார் ஏஜென்சியின் வாகனத்தின் மூலம் பணம் எடுத்து வரப்பட்டது. அந்த வாகனத்தை நிலைக் கண்காணிப்பு குழுவினர் நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், ரூ.2 கோடியே 5 லட்சம் ரொக்கம் இருந்தது.
இதில், ரூ.1 கோடியே 65 லட்சத்துக்கு மட்டுமே ஆவணங்கள் இருந்ததால், மொத்த பணத்தையும் வாகனத்துடன் கைப்பற்றி, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையர் இளங்கோவனிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து வங்கி அதிகாரிகளிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினர். இதையடுத்து வங்கி அதிகாரிகள் மீதமுள்ள ரூ.40 லட்சத்திற்கு உரிய கணக்குகளை காண்பித்ததையடுத்து, பணம் விடுவிக்கப்பட்டது.
இதேபோல், வீரப்பம்பாளையம் பிரிவு அருகே நிலை கண்காணிப்புக் குழுவினர் நடத்திய வாகன சோதனையில், நசீர் ஷேக் முகமது பாஷா என்ற பழ வியாபாரியின் கார் சிக்கியது. காரில் ரூ.35 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் இருந்த நிலையில், அதற்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த கண்காணிப்புக் குழுவினர், உரிய ஆவணங்களைக் காட்டி பணத்தைப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தினர். அந்தியூரை அடுத்த மூங்கில்பட்டியில் நடந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் லாரியில் எடுத்து வரப்பட்ட ரூ.1.58 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கணக்கில் வராத ரூ. ஒரு கோடியே 4 லட்சத்து 93 ஆயிரத்து 740 தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காட்டப்பட்டதால், ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் விடுவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago