கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - ரூ.1,500 கோடி பணப் பரிவர்த்தனை பாதிப்பு : வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் தகவல்

By செய்திப்பிரிவு

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் சுமார் ரூ.1,500 கோடி பணப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது.

கோவை மாவட்டத்தில் வங்கிஅதிகாரிகள், ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கனரா வங்கியின் மண்டல அலுவலகம் முன், தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் தேசிய துணைப் பொதுச் செயலர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். இதில், சங்கநிர்வாகிகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வங்கிகளை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல, கோவை ரயில்நிலையம் அருகேயுள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளை முன், அனைத்து வங்கிப் பணியாளர் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பு மாவட்டச் செயலர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார்.

இதுகுறித்து தேசியமயமாக்கப் பட்ட வங்கி அதிகாரிகள் சங்க தேசிய துணைப் பொதுச் செயலர் ஈஸ்வரமூர்த்தி கூறும்போது, "கோவை மாவட்டதில் 900 வங்கிக்கிளைகளில் பணிபுரியும் அதிகாரி கள், ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் ரூ.500 கோடி பணப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

வங்கிகளை தனியார் மயமாக்கினால் பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்படு வார்கள். மாணவர்கள், இளைஞர் கள், கிராமப்புற மக்களுக்கான சேவைகள் பாதிக்கப்படும்" என்றார்.

திருப்பூர்

திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் பிரதானக் கிளை முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டுக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி.மனோகரன் தலைமை வகித்தார்.

மாவட்டம் முழுவதும் 350 வங்கிக் கிளைகளைச் சேர்ந்த 4,000 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், சுமார் ரூ.1,000 கோடி வங்கிப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நீலகிரி

வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் வேலைநிறுத்தத்தால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். உதகையில் 50-க்கும் மேற்பட்ட ஏடிஎம் இயந்திரங்கள் செயலிழந்ததால், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்