முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா. மெகராஜ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு:
கடந்த சில நாட்களாக அண்டை மாநிலம் மற்றும் மகாராஷ்டிராவிலும் பரவல் அதிக மாக உள்ளது. எனவே மக்கள் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். இரண்டு மீட்டர் தூரம் சமூக இடைவெளி பின்பற்றவேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்கு கழுவியோ அல்லது கிருமிநாசினி பயன்படுத்தியோ சுத்தம் செய்யவேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என கண்காணிப்பதற்காக கரோனா தடுப்பு பறக்கும் படை என்ற சுகாதாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள 15 வட்டாரத்திலும் தலா 2 பறக்கும் படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பறக்கும் படையிலும் ஒரு மருத்துவர் மற்றும் சுகாதார பணியாளர்கள் பணியில் இருப்பர். இக்குழு கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கும். முகக்கவசம் அணியவில்லை எனில் ரூ.200, சமூக இடைவெளி பின்பற்றவில்லை எனில் ரூ.500 மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். எனவே கரோனாதொற்று தடுப்பு விதிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago