வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - பணப்பரிவர்த்தனை, ஏடிஎம் சேவைகள் பாதிப்பு :

By செய்திப்பிரிவு

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்கள் சார்பில் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.

திருநெல்வேலி புரத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கி முன் வங்கிஊழியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வங்கி ஊழியர் சங்க திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகர பகுதிகளில் பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணத்தட்டுப்பாடு காணப்பட்டது.

தென்காசி

தென்காசி ஸ்டேட் பேங்க்அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.

சங்க நிர்வாகிகள் கூறும்போது, “தென்காசி மாவட்டத்தில் சுமார் 80 வங்கிகளில் பணிபுரியும் 850 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கி சேவைகள் பாதிக்கப்படும். ஏடிஎம் சேவையும் பாதிக்கப்படக்கூடும்” என்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாட்டத்தில் உள்ள 134 தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகளைச் சேர்ந்த சுமார் 1,600 ஊழியர்கள், அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். 5 ஊழியர் சங்கங்கள், 4 அலுவலர் சங்கங்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றன. இதனால் அனைத்து வங்கிக் கிளைகளும் மூடப்பட்டிருந்தன. இம்மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள் மூலம் தினமும் சுமார் ரூ.650 கோடி அளவுக்கு பணப் பரிவர்த்தனை நடைபெறும் நிலையில், நேற்று பணப் பரிவர்த்தனை முழுமையாக பாதிக்கப்பட்டது.

கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். தொழிற்சங்க ஐக்கிய பேரவை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகர வங்கி ஊழியர் சங்கத் தலைவர் அப்துல் காதர் தலைமை வகித்தார். சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று சில வங்கிகளில் மட்டும் அதிகாரிகள் பணியில் இருந்தனர். மாவட்டம் முழுவதும் 248 வங்கிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று பணிக்கு செல்லவில்லை. நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் தலைமையில் போராட் டம் நடைபெற்றது.

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாமல் வாடிக்கையாளர்கள் தவித்தனர். ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால் மக்கள் அவதிக் குள்ளாயினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்