தென்காசி மாவட்டத்தில் முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இரண்டாம் நாளான நேற்று வேட்புமனு தாக்கல்விறுவிறுப்படையத் தொடங்கியது.
ஆலங்குளம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பி.எச்.மனோஜ் பாண்டியன் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ மனோகரனிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் கூறும்போது, “ஆலங்குளம் தொகுதியின் அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணி குடிநீர் திட்டம் கொண்டு வருவேன். ஆலங்குளத்தை தலைமையிடமாகக் கொண்டு கோட்டாட்சியர் அலுவலகம் கொண்டு வருவேன்” என்றார்.
ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டுப் படை கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அ.ஹரி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
தென்காசி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செல்வமோகன்தாஸ் பாண்டியன் ,தேர்தல் நடத்தும் அலுவலர் ராமச்சந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தென்காசி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வின்சென்ட் ராஜ் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளில் நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தென்காசி தொகுதிக்கு மானூர் அருகே உள்ள வன்னிக்கோனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த மனோகர் என்பவர், காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாக மனு தாக்கல் செய்துள்ளார்.
இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்களாக சிவகுமார், ஆத்தியப்பன் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago