வாக்குப்பதிவு பணி தொடர்பாக - நாமக்கல்லில் தேர்தல் பணி அலுவலர்களுக்கு பயிற்சி :

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் 9,836 அலுவலர்களுக்கு வாக்குசாவடி களில் மேற்கொள்ள வேண்டி பணிகள் தொடர்பாக முதல் கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 2,049 வாக்குசாடிகள் உள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச் சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட மொத்தம் 9,836 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ளனர்.

இவர்களுக்கு சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் வாக்குப் பதிவு பணிகள் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள், வாக்காளர் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் விவிபேட் கருவி அவற்றை பயன்படுத்தும் முறை உள்ளிட்டவைகள் தொடர்பான பயிற்சி அளிக்கப் பட்டன.

மேலும், வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி முகவர் கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு மேற்கொள்வது, தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்வது, வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வாக்குப்பதிவு சதவீதம் குறித்து தலைமையிடத்துக்கு குறுந்தகவல் மூலம் செய்தி அனுப்புவது, வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்த பின்னர் வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருப்போர்களுக்கு டோக்கன் வழங்கும்முறை ஆகியவை தொடர்பான பயிற்சியும் அளிக்கப்பட்டது.

மேலும், வாக்குச்சாவடி அலுவலர்கள் அனைவருக்கும் தபால் வாக்களிக்க கேட்பு படிவம் 12 வழங்கப்பட்டன. முன்னதாக நாமக்கல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பரமத்தி வேலூரில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் கா.மெகராஜ் பார்வையிட்டார். ஆய்வின்போது, பரமத்தி வேலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் மோகனசுந்தரம், வட்டாட்சியர்கள் சுந்தரவள்ளி, தமிழ்மணி ஆகியோர் உடனிருந்தனர்.

இதுபோல, ராசிபுரம், சேந்த மங்கலம், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய தொகுதிகளிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்