கரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி - விதிமீறினால் வணிக நிறுவனங்கள் அடைக்கப்படும் : நெல்லை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் அறிக்கை: திருநெல்வேலி மாநகர பகுதிகளில் கரோனா பரவல் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. அதேநேரத்தில் அண்டை மாநிலங்களில் நோய் பரவல் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் வணிகப் பகுதிகளில் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். காய்ச்சல், சளி, இருமல், தும்மல் உள்ளவர்கள் கடைகளுக்கோ, வணிக வீதிகளுக்கோ செல்லக்கூடாது. நிறுவனங்கள், கடைகள் முன்புறம் சோப்பு அல்லது சோப்புநீர் கொண்டு (சேனிடைசர் இருப்பினும்) கைகளை கழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும்.

பேருந்துகள், ஆட்டோக்களில் பயணம் செய்யும்போது சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வணிக நிறுவனங்கள் அரசு அறிவுறுத்தியுள்ள கோவிட்- 19 தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றவேண்டும். ஊழியர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனில் எவ்வித பாரபட்சமுமின்றி சம்பந்தப்பட்ட கடை, வணிக நிறுவனம் முன்னறிவிப்பின்றி 10 நாட்களுக்கு அடைக்கப்படும். அதன் பின்பும் வழிமுறைகளை மீறினால், கரோனா வைரஸ் தொற்று முழுவதுமாக அகலும் வரை கடை அடைக்கப்படும்.

வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்ய சுகாதார ஆய்வாளர்களை உள்ளடக்கிய 9 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்

தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிக்கை:

கரோனா தடுப்பு விதிகளை மீறினால் சுகாதாரத் துறை, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மூலம் அபராதம் விதிக்கப்படும். கடந்த வாரத்தில் விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.68,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் 7 நாட்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், 7 நாட்களுக்கு தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இந்த நாட்களில் காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு 04633 290548, 1077 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ள வேண்டும். அல்லது அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கேரள எல்லையையொட்டி புளியரையில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தேர்தலையொட்டி நடைபெறும் வாகன சோதனைப் பணிகளை ஆட்சியர் நேற்று ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்