வேலூர் பாலாற்றங்கரையில் நடைபெற்ற மயானக்கொள்ளை திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஆண்டு தோறும் மாசி மாதம் அமாவாசை தினத்தன்று மயான கொள்ளை திருவிழா நடத்தப்படுகிறது. வேலூரில் மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், சத்துவாச் சாரி, விருதம்பட்டு மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மேள, தாளம் முழங்க பாலாற்றங்கரை நோக்கி கொண்டு சென்றனர்.
ஊர்வலத்தின் ஒரு பகுதியாக பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் கடவுள் போன்று வேடமிட்டு சென்றனர். ஆண்கள் பலர் பெண்கள் வேடமிட்டும் சென்றனர். ஊர்வலத்தில் பெண்கள் சாமி ஆடியபடி கோழி, ஆடுகளை வாயில் கவ்வியபடி சென்றனர். ஊர்வலத்தை முன்னிட்டு வேலூர்-காட்பாடி இடையிலான புதிய பாலாற்று பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பழைய பாலாற்று பாலம் வழியாக திருப்பிவிடப்பட்டது.
பாலாற்றங்கரையில் மண்ணால் செய்யப்பட்ட அங்காள பரமேஸ்வரி சிலையை வழிபட்டு சூறையிடும் நிகழ்வும் நடத்தப்பட்டது. அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள் உப்பு, மிளகு, சுண்டல், கொழுக்கட்டை போன்றவற்றை சூறையிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வேலூர் பாலாற்றங்கரையில் நடைபெற்ற மயானக்கொள்ளை திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
அதேபோல், ஆற்காடு, ராணிப்பேட்டை, அரக்கோணம், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மயானக்கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago