கரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் : ஈரோடு ஆட்சியர் ஆய்வில் 2 கடைகளுக்கு சீல் வைப்பு

By செய்திப்பிரிவு

ஈரோட்டில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத இரு கடைகளுக்கு சீல் வைத்த ஆட்சியர் சி.கதிரவன், ஐந்து கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், ஈரோடு மாவட்ட நிர்வாகம் தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. நகரின் முக்கியச் சாலைகளில் சோதனை மேற்கொள்ளும் அலுவலர்கள், முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன், எஸ்பி தங்கதுரை ஆகியோர் ஈரோடு வ.உ.சி பூங்கா தினசரி காய்கறிச் சந்தை, பேருந்து நிலைய வணிக நிறுவனங்கள், பேருந்துகள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முகக்கவசம் அணியாமல் இருந்த காய்கறிச்சந்தை வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு காய்கறிகளை வழங்கக் கூடாது என்றும், முகக்கவசம் அணியாமல் வியாபாரம் செய்தால் கடைகள் மூடப்படும் என்றும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து பூங்கா சாலையில் உள்ள உணவகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், முகக்கவசம் அணியாமல் ஊழியர்கள் பணியாற்றியதால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத, மேலும் நான்கு உணவு விடுதிகளுக்கு தலா ரூ.5,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேருந்து நிலைய வளாகத்தில் முகக்கவசம் அணியாத பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முகக்கவசம் அணியாத பயணிகளை பேருந்துகளில் அனுமதிக்கக் கூடாது என ஆட்சியர் சி.கதிரவன் அறிவுறுத்தினார். அப்பகுதியில், கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத செல்போன் விற்பனையகம் மற்றும் உதிரிபாக விற்பனையகத்திற்கு சீல் வைக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறும்போது, தற்போது கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் இதற்கு போதிய ஒத்துழைப்பு தராததால், ரூ.200 அபராதம் விதிக்கும் பணி தொடங்கியுள்ளது. பொதுமக்கள் வெளியே செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசமும், சமூக இடைவெளியும் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவ வேண்டும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்