ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு கடந்த இரண்டு மாதங்களில் பாம்பு பிடிப்பதற்காக 80 அழைப்புகள் வந்துள்ளன.
குடியிருப்புப்பகுதிகள், தொழிலகங்கள், பொது இடங்களில் தீ விபத்து ஏற்படும் போது அதனை அணைப்பதற்காக, தீயணைப்புத்துறைக்கு பொதுமக்கள் அழைப்பு விடுப்பது வழக்கம். இதேபோல், காவிரி, பவானி ஆறுகள் ஓடுவதால் நீரில் தவறி விழுபவர்களைக் காப்பாற்றவும் தீயணைப்புப்படையினர் உதவி வருகின்றனர்.
இந்த பணிகளைத் தாண்டி ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு, பாம்பு பிடிப்பதற்கான அழைப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு 90 அழைப்புகள் வந்துள்ளன. இதில் 80 அழைப்புகள் பாம்பு பிடிப்பது தொடர்பாக வந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தீயணைப்பு நிலைய வீரர்கள் கூறியதாவது:
கோடைகாலங்களில் வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியாமல், பாம்புகள் இதமான இடம் தேடி செல்வது வழக்கம். தற்போது கோடைகாலம் தொடங்கி விட்டதால், புதர் பகுதிகளில் இருந்து வெளியேறும் பாம்புகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வருகின்றன. இது தொடர்பாக அதிக அளவில் அழைப்புகள் வருகின்றன. இதன்பேரில் அங்கு சென்று, பாம்புகளைப் பிடித்து வனப்பகுதியில் விட்டு வருகிறோம். வீடுகளில் பழைய பொருட்கள், ரப்பர், டயர், செங்கல் குவியல் இவற்றின் கீழ் பகுதியில் பாம்புகள் பதுங்கி இருக்கலாம் என்பதால், பொதுமக்கள் இவற்றைத் தவிர்க்க வேண்டும், என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago