நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேட்புமனு தாக்கல் செய்வது தொடர்பாக அரசியல் கட்சியினருக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று (12-ம் தேதி) முதல் 19-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது. அரசு விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனுதாக்கல் செய்யலாம்.
மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் இரண்டு நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். வேட்பாளர்கள் இரண்டு வாகனத்தில் மட்டும் வர அனுமதிக்கப்படுவர். மனு தாக்கல் செய்யும் ஒவ்வொரு வேட்பாளரும், தேர்தல் செலவினங்களுக்காக புதியதாக தனி வங்கிக் கணக்கு ஒன்றை தொடங்கி அதன் விவரத்தினை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு மனுதாக்கலின் போது தெரிவிக்க வேண்டும். வங்கிக் கணக்கு வேட்பாளர் பெயரில் மட்டுமோ அல்லது அவரது தேர்தல் முகவரின் பெயருடன் சேர்த்து கூட்டாகவோ இருக்கலாம்.
தேர்தல் செலவுகளுக்கான பணம் அனைத்தும் இந்த கணக்கில் வரவு வைக்கப்படவேண்டும். ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் வங்கிக் கணக்கை தேர்தல் செலவினங்களுக்கு பயன்படுத்தக் கூடாது. சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் தேர்தல் செலவுகள் அதிகபட்சமாக ரூ.30 லட்சத்து 80 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும், என்றார்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்திரூபவ், நாமக்கல், திருச்செங்கோடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago