வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் முதற் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 6,580 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்கான கணினி குலுக்கல் முறையை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது, அவர் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் 6,580 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்ற உள்ளனர். இதில், வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,539 அலுவலர்கள் பணியாற்றவுள் ளனர். அவர்களுக்கு வாணியம் பாடி இஸ்லாமியா ஆண்கள் கலைக் கல்லூரியிலும், ஆம்பூர் தொகுதியில் பணியாற்ற உள்ள 1,198 அலுவலர்களுக்கு ஆம்பூர் இந்து ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஜோலார்பேட்டை தொகுதியில் பணியாற்ற உள்ள 1,029 அலுவலர்களுக்கு நாட்றாம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யிலும், திருப்பத்தூர் தொகுதியில் பணியாற்ற உள்ள 2,964 அலுவலர்களுக்கு திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் முதற் கட்ட பயிற்சி வகுப்புகள் வரும் 14-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
இதில், மண்டல அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் தனித்துவமான பயிற்சிகள் அளிக்கப்படும். அனைத்து படிவங்களும் நிரப்பும் பயிற்சி அளிக்கப்படும்.
அதேபோல, வாக்குச்சாவடி அலுவலர்களிடமிருந்து தபால் வாக்குகளுக்கான படிவங்களை பூர்த்தி செய்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,371 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 6,580 பேர் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்ற உள்ள அனைவரும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் பணியாற்ற வேண்டும்.
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் தேவையில்லாமல் விடுப்பு கோரக்கூடாது. உச்சபட்ச மருத்துவ காரணங்களுக்காக விடுப்பு கோரும் பட்சத்தில் அரசுமருத்துவக்குழுவின் நேரடி விசாரணைக்கு உட்பட்டு விடுப்பு அளிக்க பரிசீலிக்கப்படும். முதற் கட்ட பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
போதுமான காரணங்கள் இல்லாமல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago