சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோயில்களின் திருவிழா தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6-ம் தேதி இரவு பூச்சாட்டுடன் விழா தொடங்குகிறது.
ஈரோடு நகரின் காவல்தெய்வமாக விளங்கும் பெரியமாரியம்மன் வகையறா கோயில்களாக, சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா, கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி, தேரோட்டம் ஆகியவை விமர்சையாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு திருவிழாவிற்கான பூச்சாட்டுதல் நடந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டது.
இந்த ஆண்டு பெரியமாரியம்மன் கோயில் திருவிழா மார்ச் 16-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு திருவிழாவை நடத்தலாமா என்பது குறித்து ஆர்.டி.ஓ. சைபுதீன் தலைமையில், நேற்று முன் தினம் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் திருவிழாவை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி அறிவுறுத்தலின்படி, திருவிழா நடத்துவது குறித்து, பெரியமாரியம்மன் கோயிலில் பூ போட்டு அருள்வாக்கு கேட்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று காலை கோயில் செயல் அலுவலர் ரமணிகாந்தன் முன்னிலையில், பெரிய மாரியம்மனுக்கு மூன்று கால சிறப்பு பூஜை செய்து, பூ போட்டு அருள்வாக்கு கேட்கப்பட்டது. இதில், அம்மன் விழாவை நடத்திக் கொள்ளலாம் என முடிவானது.
அதன்படி, மார்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்ட பூச்சாட்டுதல் ரத்து செய்யப்படுகிறது. மாறாக, சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தினமான ஏப்ரல் 6-ம் தேதி இரவு, 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்குகிறது. 7-ம் தேதி இரவு 10 மணிக்கு மூன்று கோயில்களிலும் கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏப்ரல் 8-ம் தேதி அதிகாலை காரை வாய்க்கால் மாரியம்மன் கோயிலில் குண்டம் விழா, அரசு வழிகாட்டுதல் படி கோயில் பூசாரிகள் மட்டும் இறங்க உள்ளனர். அதைத்தொடர்ந்து சின்ன மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் நடக்கிறது. 9-ம் தேதி மாவிளக்கு மற்றும் கரகம் எடுத்து வருதலும், 12-ம் தேதி மதியம் மூன்று கோயில்களிலும் கம்பம் பிடுங்கப்பட்டு மஞ்சள் நீராட்டு விழாவும், 13-ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago