அன்பில் கோயில் திருவிழாவில் மோதல் - கல்வீசி தாக்கியவர்கள் மீது போலீஸார் தடியடி : 144 தடை உத்தரவு அமல்

By செய்திப்பிரிவு

திரு்சசி அருகே அன்பில் ஆச்சிராமவள்ளியம்மன் கோயில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்துமோதலில் ஈடுபட்டவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் ஆச்சிராமவள்ளியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு மாசி திருவிழா நடைபெற்று வந்த நிலையில், மற்றொரு பிரிவைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் தெருக்களில் சாமியை ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தியதால் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து கடந்த 1994 முதல் இங்கு திருவிழா நடைபெறவில்லை.

அதன்பின் கடந்தாண்டு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஏற்கெனவே நடைமுறையில் உள்ளபடி திருவிழா நடத்தப்பட்டது. இதற்கு மற்றொரு பிரிவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஏற்கெனவே பின்பற்றப்படும் நடைமுறைகளுடன் நிகழாண்டு திருவிழாவை நடத்த உயர்நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, திருவிழாவின்போது சாமி ஊர்வலம் தங்களது தெருவுக்கும் வர வேண்டும் என மற்றொரு பிரிவைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர். ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவைக் காரணம்காட்டி, ஏற்கெனவே உள்ள நடைமுறையின்படி திருவிழா நடத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்தது.

இந்த சூழலில் நேற்று இத்திருவிழா நடைபெற்றது. மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம், டி.ஐ.ஜி ஆனிவிஜயா, எஸ்.பி ராஜன் உள்ளிட்ட ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, நேற்று காலை அங்குள்ள சிவன் கோயிலில் இருந்து அம்மன் சிலையை தூக்கிக் கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் ஆச்சிராமவள்ளியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டனர். அண்ணாநகர் பகுதியில் வந்தபோது, அங்கிருந்த சிலர், சாமி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது கல்வீசி தாக்கினர். இதில் காவலர்கள், பொதுமக்கள் என 7 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து கல்வீசியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அம்மன் சிலை ஆச்சிராமவள்ளியம்மன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக 17 பேரைப் பிடித்து லால்குடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்