சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. மூவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் வி.எம்.ராஜலெட்சுமிக்கு (35) போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக மாநில மகளிரணி துணைச் செயலா ளராக உள்ளார். சங்கரன்கோவில், காந்திநகர், கீழ 3-ம் தெருவில் வசித்து வருகிறார். இவரது கணவர் வி.முருகன், நகர இளைஞரணி பாசறை பொருளாளராக உள்ளார்.
வாசுதேவநல்லூர் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏ அ.மனோகரனுக்கு (43) மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணி பிரிந்தபோது, அவருடன் அ.மனோகரன் எம்எல்ஏவும் சென்றார். பி.ஏ. படித்துள்ள இவர், சிவகிரி வட்டம், விஸ்வநாதப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர்.
கடையநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா (38), முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியனின் மகன். செங்கோட்டையில் வசிக்கிறார். தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு செங்கோட்டை நகராட்சி உறுப்பினராக இருந்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகிறார்.
தென்காசி தொகுதிக்கு தற்போதைய எம்எல்ஏ எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் (51) அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார்.
ஆலங்குளம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.எச்.மனோஜ் பாண்டியன் (51) அதிமுக அமைப்புச் செயலாளராகவும், வழிகாட்டுக் குழு உறுப்பினராகவும் உள்ளார். தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சிந்தியா பாண்டியன் ஆகியோரது மகன். சென்னையில் வசிக்கிறார். முதுநிலை சட்டப்படிப்பு படித்துள்ளார். உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். 2001-ல் சேரன்மகாதேவி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010 முதல் 2016 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவரும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தவர்.
5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. மூவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago