முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் ஈரோட்டில் கண்காணிப்பு தீவிரம் :

By செய்திப்பிரிவு

கரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், ஈரோட்டில் முகக்கவசம் அணிவது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. சாலைகள்தோறும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

ஈரோட்டில் கடந்த ஆண்டு கரோனா பரவல் அதிகரித்த நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன்பலனாக, கரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், தற்போது உருமாறிய கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

ஈரோட்டில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் எச்சரிக்கை விடுத்தார். இதனை அமல்படுத்தும் வகையில், நகரின் முக்கிய சாலைகளில் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள், சுகாதாரத்துறை ஆய்வாளர்கள், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு உடனுக்குடன் ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு, ரசீது வழங்கப்படுகிறது.

முகக்கவசம் அணிவது குறித்தும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தியும், ஒலிப்பெருக்கி மூலம் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக சுகாதாரதத்துறை அதிகாரிகள் கூறும்போது, ஈரோட்டில் உருமாறிய கரோனாவின் தாக்கம் இல்லை என்றாலும், வரும் முன் காப்போம் என்ற வகையில், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன, என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்