சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட 6 தொகுதிகளில் பயன்படுத்துவதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ் தலைமை வகித்தார். வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையில் இருந்து 20 சதவீதம் கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளும், 30 சதவீதம் கூடுதலாக விவிபேட் இயந்திரங்களும் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இதன்படி ராசிபுரம் (தனி) தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகளுக்கு 20 சதவீதம் வீதம் தலா 399 வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 30 சதவீதம் கூடுதலாக 432 விவிபேட் இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதுபோல் சேந்தமங்கலம் (பகு) தொகுதியில் உள்ள 342 வாக்குச்சாவடிகளுக்கு தலா 411 வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம், 445 விவிபேட் இயந்திரங்கள், நாமக்கல் தொகுதியில் உள்ள 377 வாக்குச்சாவடிகளுக்கு தலா 453 வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 491 விவிபேட் இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டன.
பரமத்தி வேலூர் தொகுதியில் உள்ள 317 வாக்குச்சாவடிகளுக்கு தலா 381 வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் , 413 விவிபேட் இயந்திரங்கள், திருச்செங்கோடு தொகுதியில் உள்ள 323 வாக்குச்சாவடிகளுக்காக தலா 388 வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 420 விவிபேட் இயந்திரங்கள், குமாரபாளையம் தொகுதியில் உள்ள 358 வாக்குச்சாவடிகளுக்கு தலா 430 வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 466 விவிபேட் இயந்திரங்களும் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டன.
தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டடன. முன்னதாக தேர்வு செய்யப்பட்ட இயந்திரங்களின் வரிசை எண்கள் அடங்கிய பட்டியல் அந்தந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மு.கோட்டைக்குமார், ப.மணிராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago