கடலில் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு, 4 தமிழக மீனவர்கள் உயிரிழந்த வழக்கு கடலோரக் காவல் படையிடமிருந்து நேற்று சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஏ.மெசியா(30), உச்சிப்புளியைச் சேர்ந்த வி.நாகராஜ்(52), எஸ்.செந்தில்குமார்(32), மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த என்.சாம்சன் டார்வின்(28) ஆகியோர் கடந்த ஜன.18-ம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி தங்களது ரோந்து கப்பல் மூலம் தமிழக மீனவர்களின் படகை இலங்கை கடற்படையினர் இடித்து மூழ்கடித்தனர். அதில், படகுடன் மீனவர்கள் 4 பேரும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மீனவர்களின் சடலங்கள் 4 நாட்களுக்குப் பிறகு இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டு, மத்திய, மாநில அரசு அலுவலர்கள் மூலம் அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த சம்பவத்துக்கு இலங்கை அரசுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்ததோடு, உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டது.
இதுதொடர்பான வழக்கு திருப்புனவாசல் கடலோரக் காவல் படையிடமிருந்து, தற்போது கோட்டைப்பட்டினம் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago