கோடை மழை பெய்த நிலையில் - குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு :

By செய்திப்பிரிவு

கோடை மழையால் குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த மாதம் வரை பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது. பகலில் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் ராமநதி அணை, கருப்பாநதி அணையில் தலா 10 மி.மீ. மழை பதிவானது. சிவகிரியில் 3 மி.மீ. மழை பதிவானது. கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில், இரவில் பெய்த மழையால் பிரதான அருவியில் நீர் வரத்து சற்று அதிகரித்தது. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் அருவியில் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர்.

இந்த மழையால் அணைக ளுக்கு நீர் வரத்து ஏற்படவில்லை. வறட்சியால் அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. கடனாநதி அணை நீர்மட்டம் 76.70 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 72.25 அடியாகவும், கருப்பா நதி அணை நீர்மட்டம் 57.42 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 34.50 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 56.50 அடியாகவும் இருந்தது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் சேர்வலாறு அணைப்பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 50 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே வறண்ட வானிலை நிலவிவந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் அணைப்பகுதிகளிலும், பிற பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 21, சேர்வலாறு- 50, மணிமுத்தாறு- 22.6, அம்பாசமுத்திரம்- 6, சேரன்மகாதேவி- 3, ராதாபுரம்- 4.40.

143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 115.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடி க்கு 316 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை யிலிருந்து 408 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்ப ட்டிருந்தது. 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 104 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 92 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 475 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் சில பகுதிகளில் நேற்று காலை பரவலாக மழை பெய்தது.

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் காலை 7 மணியளவில் திடீரென மழை பெய்தது. சுமார் 30 நிமிடங்கள் நீடித்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. முக்கிய சாலை ஓரங்களில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி பணியாளர்கள் உடனடியாக டேங்கர் லாரிகள் மூலம் அகற்றினர்.

இதேபோல் வைகுண்டம், ஏரல், சிவகளை உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக நிலவிய வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.

பேச்சிப்பாறையில் 19 மிமீ பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் நேற்று மழை கொட்டியது. அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 19 மிமீ மழை பதிவானது.

குமரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே, கோடை காலத்தைப்போல் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. கும்பப்பூ நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வயல்களில் அறுவடை செய்து, நெல்லை கரைசேர்ப்பதற்கு ஏற்ற பருவமாக இது உள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் இருந்து விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது. நேற்று காலையிலும் மழை கொட்டியது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமான சூழல் நிலவியது. அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 19 மிமீ மழை பதிவானது.

நாகர்கோவிலில் 16 மிமீ, சிற்றாறு ஒன்றில் 12, சிற்றாறு இரண்டில் 6, சுருளகோட்டில் 5, அடையாமடையில் 11 மீமீ மழை பெய்தது. வெகு நாட்களுக்கு பின்பு பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதேநேரம் காலை 11 மணிக்கு பின்னர் எப்போதும் போல் வெயில் கடுமையாக அடித்தது.

மழைக்கு மத்தியில் பேச்சிப்பாறை அணைக்கு உள்வரத்தாக 465 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 39 அடியாக உள்ள நிலையில் பாசனத்திற்காக 861 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 54.70 அடியாக உள்ளது. அணைக்கு உள்வரத்தாக 72 கனஅடி தண்ணீர் மட்டும் வரும் நிலையில் அணையில் இருந்து 361 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. முக்கடலில் 13 அடி தண்ணீர் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்