தவணை செலுத்தாத விவசாயி மீது தாக்குதல் - வங்கி, வசூல் முகவர் மீது நடவடிக்கை கோரி மனு :

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தை அடுத்த பனையம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி(70). இவரது மகன் ராஜ்குமார்(39). விவசாயிகளான இவர்கள் கரூரில் உள்ள தனியார்வங்கியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்ட விவசாய மேம்பாட்டுக் கடனாக ரூ.26 லட்சம் பெற்றுள்ளனர். இதில் அவர்கள் கடைசி தவணையை செலுத்தவில்லை.

இதையடுத்து, வங்கியின் வசூல் முகவர் மதன்குமார்(29) கடந்த 5-ம் தேதி ராஜ்குமாரிடம் தவணைத் தொகையை கேட்டுள்ளார். அப்போது, இருவரிடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது.

இதில், மதன்குமார் ஹெல்மெட்டால் ராஜ்குமாரை தாக்கியதில் அவரின் கையில் காயம் ஏற்பட்டு செல்போன் சேதமடைந்தது. இதையடுத்து, கரூர் தனியார் மருத்துவமனையில் ராஜ்குமார் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து சின்னதாராபுரம் காவல் நிலையத்தில் ராஜ்குமார் அளித்த புகாரின்பேரில், மதன்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும், சின்னதாராபுரம் காவல் நிலையத்தில் மதன்குமார் அளித்த புகாரின்பேரில், ராஜ்குமார், ராமசாமி ஆகியோர் மீதும் கொலைமிரட்டல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் மனு

இந்நிலையில் வங்கி மீதும், வங்கி வசூல் முகவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கரூர் ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE