நெல்லை வாக்கு எண்ணும் மையத்தில் - ஆட்சியர், காவல் அதிகாரிகள் ஆய்வு :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் வாக்கு எண்ணும் மையமான அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான வே.விஷ்ணு மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலி, நாங்குநேரி தொகுதிகளுக்கு மெயின் வளாகத்திலும், அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, ராதாபுரம் தொகுதிகளுக்கு தனித்தனி வளாகங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறைகள், வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் அறைகள் உள்ளிட்டவற்றை ஆட்சியர், மாநகர காவல்ஆணையர் அன்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆய்வு செய்தனர்.

விதிமீறல் இல்லை

செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறும்போது, “ திருநெல்வேலி மாவட்டத்தில் 1,924 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 309 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை. வாக்குப்பதிவுக்கு 3,229 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2,416 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2,563 விவிபாட் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. இவற்றை எடுத்துச் செல்ல 157 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறையில் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. இதனால் தேர்தல் விதிகள் மீறப்படவில்லை.

மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக இதுவரை8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற எண்ணுக்கு இதுவரை372 அழைப்புகள் வரப்பெற்றுள்ளன. 13,431 சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன” என்றார்.

மாநகர காவல் ஆணையர் அன்பு கூறும்போது, “தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக பாரபட்சமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகையின்போது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதுபோல பாஜக பிரச்சாரத்தின்போதும் விதிமீறல் தொடர்பாக ஒரு வழக்கு பதிவாகியுள்ளது” என்றார்.

கூடுதலாக மத்திய படை

காவல் கண்காணிப்பாளர் கூறும்போது, “திருநெல்வேலி மாவட்டத்துக்கு ஏற்கெனவே ஒரு கம்பெனி மத்திய படை வந்துள்ளது. கூடுதலாக ஒரு கம்பெனி மத்திய படையினர் வரவுள்ளனர். பறக்கும்படை சோதனைகள், நிலையானகண்காணிப்பு குழுக்களுடன்இணைந்து மேற்கொள்ளப்படுகிறது” என்றார். மாநகர காவல் துணை ஆணையர்கள் சீனிவாசன், மகேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், சார் ஆட்சியர்கள் சிவகிருஷ்ணமூர்த்தி, பிரதீக் தயாள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்