கரோனாவால் பாதித்தோருக்கு தபால் வாக்கு: சிவகங்கை ஆட்சியர் தகவல் :

இது குறித்து அவர் கூறியதாவது: கரோனாவால் பாதிக்கப்பட்டோர் ‘ஏவிசிஓ’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் வீட்டில் அல்லது நிறுவனத் தனிமைப்படுத்தப்பட்டோர், மருத்துவ ஆலோசனையின் பேரில் நேரில் சென்று வாக்களிக்க இயலாதோர் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

தகுதியுள்ளோருக்கு அந்தந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் மார்ச் 16-க்குள் படிவம் 12 ‘டி’ வழங்கப்படும். அந்தப் படிவத்துடன் தொடர்புடைய மருத்துவ அலுவலரால் வழங்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சான்று அல்லது தனிமைப்படுத்தப்பட்ட சான்று இணைக்கப்பட வேண்டும்.

மேலும் ‘ஏவிசிஓ’ என வகைப்படுத்தப்பட்டோருக்கு தலைமைச் செயலர் நியமிக்கும் பொறுப்பு அலுவலரின் அறிவுரைப்படி வாக்குச்சீட்டுப் படிவம் வழங்கப்படும். தொடர்ந்து ‘ஏவிசிஓ’ வகையினர் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குச்சீட்டை வழங்கக் கோரி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் மெய்த்தன்மை அடிப்படையில் அவர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படும். மேலும் வாக்குச்சீட்டுடன் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவரும் அறிவிப்பு படிவத்தில் கையொப்பம் இட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட வாக்குச்சீட்டு 13 ‘சி’ உறையுடன் தொடர்புடைய வாக்கு அலுவலர் பெற்றுக் கொள்வார், என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE