குமாரபாளையம், அந்தியூர், தேன்கனிக்கோட்டையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குமாரபாளையம் அருகே சேலம் - கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு மேம்பாலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த குமாரபாளையம் சவுதாபுரத்தைச் சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் ரவிக்குமார் (38) என்பவரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவரிடம் ரூ.1.15 லட்சம் ரொக்கம் இருந்துள்ளது. எனினும், அத்தொகைக்கான ஆவணம் எதுவும் இல்லை. இதையடுத்து அத்தொகையை பறிமுதல் செய்த பறக்கும்படை அதிகாரிகள் அதனை குமாரபாளையம் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் கருவூலத்தில் செலுத்தப்பட்டது. மேலும், உரிய ஆவணத்தை காண்பித்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தியூரில் பறிமுதல்
அந்தியூர் அருகே ரூ.1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பெருந்தலையூர் பகுதியில் பறக்கும் படை அலுவலர் முருகன் தலைமையிலான அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கவுந்தப்பாடியில் இருந்து பிவிசி பைப் பாரம் ஏற்றி வந்த வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது வேன் ஓட்டுநரிடம் உரிய ஆவணமின்றி ரூ.1 லட்சம் ரொக்கம் இருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அத்தொகையை அந்தியூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். மேலும், உரிய ஆவணத்தை காண்பித்து அத்தொகையை பெற்றுச் செல்லும்படி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.1.50 லட்சம் பறிமுதல்
தேன்கனிக்கோட்டை பகுதியில் ரூ.1.50 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.தேன்கனிக்கோட்டை மதகொண் டப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தளி சட்டப்பேரவை தொகுதி பறக்கும் படையைச் சேர்ந்த கார்த்திகேயன், சசிகுமார், மணிமேகலை உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில், காரில் வந்த தனசேகர் (60) என்பவர் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்து, தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
உரிய ஆவணங்களை காட்டி தனசேகர் பணத்தை பெற்றுக் கொள்ள பறக்கும்படையினர் அறிவுறுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago