திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணுவிடம் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் மைக்கேல் ஜார்ஜ் கமலேஷ், செயலாளர் செ.பால்ராஜ், பொருளாளர் ரா. அமுதா உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்த மனு விவரம்:
சட்டப்பேரவை தேர்தல் பணியில் 1.97 லட்சம் பெண்கள் உட்பட 4.50 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், இதய நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், மருத்துவ விடுப்பில் உள்ளோர், மாற்றுத் திறனாளிகள், 50 வயதை கடந்தவர்கள் மற்றும் தேர்தல் பணியாற்ற இயலாத நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இவர்களுக்கு பதிலாக ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்களையும், படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர் களையும் தேர்தல் பணியில் பயன்படுத்த வேண்டும்.
வாக்குப்பதிவு நாளில் வாக்குச் சாவடிகளுக்கு சென்றுவர ஆசிரியர்களுக்கு வாகன வசதி செய்துதர வேண்டும். உணவு, குடிநீர், மின்விசிறி, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது 2 ஆசிரியர்கள் வாக்குச் சாவடிகளுக்கு உள்ளேயே மரணம் அடைந்தனர். எனவே, மண்டல அளவில் நடமாடும் மருத்துவ குழுவை அமைக்க வேண்டும்.
தேர்தல் பணிக்கு புகைப்படத்து டன் கூடிய அடையாள அட்டையை முதல் அல்லது 2-வது பயிற்சி வகுப்பிலேயே வழங்க வேண்டும். பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்டவற்றை 2 மணி நேரத்துக்குள் மண்டல அதிகாரி பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.
தபால் வாக்கை முறையாக குறிப்பிட்ட கால கெடுவுக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago