வங்கிகளில் வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தாலோ அல்லது பணம் செலுத்தினாலோ அதுபற்றிய விவரங்களை மாவட்ட தேர்தல் பிரிவுக்கு வங்கி மேலாளர்கள் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வங்கி மேலாளர்கள் மற்றும் அலுவலர் களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவன் அருள் தலைமை வகித்துப் பேசும்போது, "தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்க வங்கி பண பரிவர்த்தனைகளை தீவிரமாக கண்காணிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆகவே, வங்கிகள் மூலம் ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்பவும், கிளை வங்கிகள் மற்றும் வங்கிகளுக்கு இடையே வாகனங்களில் பணம் கொண்டு செல்லும் போது அதற்கான ஆவணங்களை வாகனங்களில் வரு வோர்களிடம் வங்கி மேலாளர்கள் கொடுத்து அனுப்ப வேண்டும்.
முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, மாவட்டம் முழுவதும் 41 பறக்கும் படையினர் பணிய மர்த்தப்பட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் வங்கி கணக்குகள் மற்றும் பண பரிவர்த்தனையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சத்துக்கு மேல் பணத்தை எடுத்தாலோ அல்லது ரூ.1 லட்சத்துக்கு மேல் பணத்தை செலுத்தினாலோ அந்த வாடிக்கை யாளர்களின் வங்கி பண பரிவர்த்தனை குறித்து மாவட்ட தேர்தல் பிரிவுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். நகைக்கடன் தொடர்பான தகவல் களையும் அளிக்க வேண்டும்.
மேலும், வங்கி வாடிக்கை யாளர்களின் கூகுள்பே, போன்பே உள்ளிட்ட இணையவழி பண பரிவர்த்தனைகளில் சந்தேகம் இருந்தால் அந்த தகவல்களையும் தேர்தல் பிரிவுக்கு உடனே தெரிவிக்க வேண்டும். மாதாந்திர சம்பளம், வணிகம் தொடர்பான பண பரிவர்த்தனை இருந்தால் அவற்றை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.
கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு தற்போது அதிகமாக பண பரிவர்த்தனை நடைபெற்றால் அந்த தகவல்களையும் வங்கி மேலாளர்கள் தேர்தல் பிரிவுக்கு தெரிவிக்க வேண்டும்.
ரூ.10 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனை நடைபெற்றால் அது குறித்து உண்மை தன்மையை ஆராய்ந்து அந்த தகவல்களை வழங்க வேண்டும்.
எனவே, வங்கி மேலாளர்கள் தேர்தல் ஆணையத்தின் விதிகளை கண்டிப்புடன் கடைபிடித்து முறையான தகவல்களை தினசரி தேர்தல் பிரிவுக்கு தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வில்சன்ராஜசேகர், முன்னோடி வங்கி மேலாளர் அருண்குமார், மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் ஜெயம் மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago