பவானி செல்லியாண்டியம்மன் கோயில் திருவிழா சேறு பூசி, வேடமிட்டு பக்தர்கள் வழிபாடு :

By செய்திப்பிரிவு

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடலில் சேறு பூசியும், காய்கறி மாலை அணிந்து பல்வேறு வேடமிட்டும் அம்மனை வழிபட்டனர்.

ஈரோடு மாவட்டம் பவானி செல்லியாண்டியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு திருவிழா பிப்ரவரி 16-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து கருவறைக்குள் சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி மற்றும் சேறுபூசும் விழா நேற்று காலை நடந்தது. மேட்டூர் சாலையில் உள்ள எல்லையம்மன் கோயிலில் இருந்து, செல்லியாண்டியம்மன் கோயிலுக்கு அம்மன் அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பவானி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், உடலில் சேறு பூசியும், காய்கறி மாலையணிந்தும், கடவுள் வேடம் தரித்தும் அம்மனை தரிசனம் செய்தனர்.

ஊர்வலத்தின்போது, பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் சேற்றினை பூசி விளையாடினர்.

இதன் மூலம் உடலில் தோல் நோய் உள்ளிட்ட அனைத்து நோய்களும் நீங்கும் என்று நம்பப்படுகிறது. அம்மன் ஊர்வலத் தில் சிறு குறு தொழில் செய்பவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற காசு, பழங்கள், மிட்டாய் உள்ளிட்ட பொருட்களை வீசி பிரார்த்தனை செய்தனர்.

திருவிழாவையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப் பட்டு இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்