கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பெருந்துறையை அடுத்த நல்லாம்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் நீரின் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. மேலும், கசிவுநீர் காரணமாக மறைமுகமாக ஒரு லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுவதோடு, 100-க்கும் மேற்பட்ட நீர் நிலைகளுக்கும் நீர் கிடைத்து வருகிறது. இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க ரூ.740 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு, சமீபத்தில் கோவையில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தை நிறைவேற்றி னால், ஈரோடு, கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கீழ்பவானி கரையோரங்களில் உள்ள கசிவுநீர் குட்டைகள் மற்றும் ஏரி, குளங்களுக்கு நீர் ஆதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பெருந்துறையை அடுத்த நல்லாம்பட்டியில், கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் ஒன்று கூடிய விவசாயிகள், பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வரும் 7-ம் தேதிக்குள் கான்கிரீட் கால்வாய் அமைக்கும் திட்டத்தை கைவிடாவிட்டால், பெருந் துறையில் ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டம் ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இந்த திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை விவசாயிகள் முறையிட்டதால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திட்டத்தை ரத்து செய்தார். தற்போது அவரது வழியில் செயல்படுவதாகக் கூறும் அரசு, விவசாயிகளின் எதிர்ப்பை மீறி இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தை செயல்படுத்தினால், 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டங் களை நடத்த முடிவு செய்துள்ளோம், என்றனர்.
இதனிடையே கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தின் செயலாளர் செ.நல்லசாமி, சட்டப்பேரவைத் தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ள நிலையில், விவசாயிகளின் எதிர்ப்பை மீறி அவசர, அவசரமாக இந்த திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago