கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளுக்காக, காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே ஒற்றை யானை காத்திருந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் யானைகள் அதிகம் உள்ளன. தமிழகம்-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமான, சத்தி - மைசூரு தேசிய நெடுஞ்சாலை இந்த வனப்பகுதி வழியாகச் செல்கிறது.
கர்நாடகாவில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகள் அதிக எண்ணிக்கையில் இச்சாலையில் பயணிக்கின்றன. லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வரும் நிலையில், சோதனைச் சாவடிகளைக் கடப்பதற்கு முன்பாக, ஓட்டுநர்கள் லாரிகளில் இருந்து கரும்பினை எடுத்து சாலையோரம் வீசி வருகின்றனர். இந்த கரும்புகளை தின்று பழகிய யானைகள், கரும்பு லாரிகளை எதிர்பார்த்து காத்திருப்பது அதிகரித்து வருகிறது.
பண்ணாரி சோதனைச்சாவடி அருகே லாரி ஓட்டுநர்கள் கரும்புகளை வீசி வந்ததால், அங்கு யானைகள் வருவது அதிகரித்தது. இதையடுத்து, சோதனைச்சாவடியில் பணியில் இருந்தோர் இதற்கு தடை விதித்தனர். இந்நிலையில், காரப்பள்ளம் வன சோதனைச்சாவடியில், உயரத்தடுப்பு கம்பி அருகில் கரும்புகளை லாரி ஓட்டுநர்கள் போட்டுள்ளனர். இதனால், கரும்பு லாரிகளை எதிர்பார்த்து யானைகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம், கரும்பு லாரியை எதிர்பார்த்து, ஒரு ஆண் யானை சோதனைச் சாவடி அருகே நீண்டநேரம் காத்திருந்ததால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். யானை வனப்பகுதிக்குள் சென்ற பின்னர், போக்குவரத்து சீரானது. கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகள், சாலையோரங்களில் கரும்புகளை வீசக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago