அறந்தாங்கி அருகே ரேஷன் கடை திறக்கக் கோரி மறியல்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே புதிய ரேஷன் கடையை திறக்கக் கோரி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோங்குடி ஊராட்சியைச் சேர்ந்த யோகாம்பாள்புரம், அத்தாணி, ஆவாகுளம், மணவயல், அல்லம்பட்டி மற்றும் தாளிச்சேரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கோங்குடியில் உள்ள ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இந்த ரேஷன் கடைக்கு 3 கி.மீ செல்ல வேண்டியுள்ளதால், தங்களுக்கு மையப் பகுதியான யோகாம்பாள்புரத்தில் புதிய ரேஷன் கடையைத் திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து அங்கு எம்எல்ஏ இ.ஏ.ரத்தினசபாபதி தொகுதி நிதியில் இருந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

இந்தக் கட்டிடத்தை திறக்க வேண்டும் என பல முறை வலியுறுத்தியும் திறக்கப்படவில்லை. இதைக் கண்டித்தும், ரேஷன் கடையை உடனே திறக்க வேண்டும் என வலியுறுத்தியும் யோகாம்பாள்புரம், அத்தாணி, ஆவாகுளம், மணவயல், அல்லம்பட்டி மற்றும் தாளிச்சேரி பகுதி மக்கள் பச்சலூரில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, இக்கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாகவும் தெரிவித்தனர்.

அறந்தாங்கி வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங் மற்றும் அறந்தாங்கி போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ரேஷன் கடையைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்