மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது வாக்காளர்களிடம் நம்பகத்தன்மை ஏற்படுத்த செயல்முறை விளக்கம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவியையும் இணைத்து பொதுமக்களுக்கு மாதிரி செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்க 60 செட் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன என பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவி செயல்பாடு மற்றும் அவற்றின் நம்பகத்தன்மை குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக செயல்முறை விளக்கம் காண்பிக்கப்படவுள்ளது. பேருந்து நிலையம், முக்கிய கோயில்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாக்காளர் விழிப்புணர்வு அரங்கம் அமைத்து அதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டப் பேரவை தொகுதிக்கு தலா 30 என மொத்தம் 60 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 60 வாக்குப் பதிவை உறுதி செய்யும் கருவிகள், 60 கட்டுப்பாட்டு கருவிகள் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த இயந்திரங்கள் தேர்தல் நாள் அன்று வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE