நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தலை யொட்டி பல்வேறு அனுமதிகளை இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பெறுவது தொடர்பாக பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:
சட்டப்பேரவை தேர்தலை யொட்டி அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், திருமண மண்டபங்களில் ஆலோசனைக் கூட்டங்கள், ஒலிபெருக்கி, பிரச்சார வாகனம், மிக முக்கிய தலைவர்கள் வருகையின் போது ஹெலிகாப்டர் இறங்கு தளம் பயன்படுத்தவும், தற்காலிக அலுவலகம் திறக்க அனுமதி பெறுதல் உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளை ஒற்றைச்சாளர முறையில் பெற சுவிதா என்ற இணையதளத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி www.suvidha.eci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை தேர்தல் நடத்தும் அலுவலர், காவல்துறையினர் மற்றும் துறை அலுவலர்களுடன் பரிசீலனை செய்து 48 மணிநேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு அனுமதியினை அந்த இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை கட்சியினர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கும் போது இணையதளத்தில் முதலில் விண்ணப்பித்தவர்களின் அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும். எனவே, அரசியல் கட்சியினர் இந்த செயலியை பயன்படுத்தி தேவையான அனுமதிகளை பெற்றுக்கொள்ளலாம், என்றார்.
தொடர்ந்து சுவிதா இணையதளம் மூலமாக அனுமதிகளை விண்ணப் பித்து பெறுவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago