பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான வெங்கட பிரியா நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
பெரம்பலூர் மாவட்டத்தில் 190 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்தல் நிகழ்வுகள் கண்காணிக்கப்பட உள்ளன. பதற்றமான 190 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 77 இடங்களில் தலா ஒருவர் என மத்திய அரசு பணியாளர்கள் பார்வையாளராக நியமிக்கப்பட உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 7,064 மாற்றுத்திறன் வாக்காளர் களும், 80 வயது நிறைவடைந்த 11,699 வாக்காளர்களும் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணிக்காக 92 துணை ராணுவ படையினர் பெரம்பலூர் வந்துள்ளனர். பறக்கும்படை, நிலையான கண்காணிக்கும் படை, வீடியோ பதிவு செய்யும் குழு உள்ளிட்ட குழுவினர் மூலமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிக்கப்பட உள்ளன என்றார்.
முன்னதாக, பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான நன்னடத்தைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் செ.ராஜேந்திரன், பெரம்பலூர் சார் ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago