வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து விமான நிலையம், சென்ட்ரலில் போலீஸார் தீவிர சோதனை

By செய்திப்பிரிவு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய அதிகாரிக்கு நேற்று முன்தினம் காலையில் ஒரு கடிதம் வந்தது. அதில், “சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், டிஜிபி அலுவலகம், கொச்சி விமான நிலையம் ஆகிய இடங்களில் குண்டு வெடிக்கும். வருகிற 1-ம் தேதி (இன்று) குண்டு வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது. அது மனித வெடிகுண்டாக கூட இருக்கலாம்” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த கடிதம் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். டிஜிபி அலுவலகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 1-ம் தேதி என குறிப்பிட்டு சொல்லப்பட்டு இருப்பதால் இன்று தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெடிகுண்டு நிபுணர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். மோப்ப நாய்கள் உதவியுடனும் சோதனை நடந்து வருகிறது.

மிரட்டல் கடிதத்தில் இருந்த அனுப்புநர் முகவரி போலியானது என போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், தீவிர சோதனைகளை மேற்கொள்ள போலீஸாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்